தொழிலாளர்கள் நலன் கருதி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த பின்னலாடையில் 70 விழுக்காடு பின்னலாடை, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்மாவட்டங்களில் தயாராகும் பின்னலாடைகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளியை ஏற்றுமதி வாயிலாக, 26 ஆயிரம் கோடி ரூபாயும், அன்னிய செலாவணி, உள்நாட்டு உற்பத்தியில் 22 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தும் நூல் விலை 40 விழுக்காடு அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. அதாவது, 40 ஆம் எண் நுால் ஒரு கிலோ ரூ.250 -இல் இருந்து ரூ. 330-க்கும், 30 ஆம் எண் நுால் ரூ.200 -இல் இருந்து ரூ.290-க்கும், 20 ஆம் எண நுால் ரூ.140 -இல் இருந்து ரூ.190 ரூபாய் என்ற அளவில் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.120 முதல் ரூ.150 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.300 முதல் ரூ.330 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மட்டுமின்றி, ஜவுளித்தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியுள்ள சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதியதாக பெறும் ஆர்டர்களுக்கு விலை உயர்த்தும் பட்சத்தில், வெளிநாட்டு வர்த்தகர்கள் நமது போட்டி நாடுகளான சீனா, வியட்நாம், கம்போடியா, பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்கு தங்கள் ஆர்டர்களை மாற்றி கொடுக்கும் அபாயம் உள்ளது.
நூல் விலை உயர்வுக்கு, பருத்தி பஞ்சு, நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வது மற்றும் பதுக்கல் காரணம் என தெரிகிறது. எனவே, ஜவுளித்தொழிலை நம்பியுள்ள சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன் கருதி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். செயற்கை பற்றாக்குறை ஏற்படுத்தும் நோக்கத்தில் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளையும் எடுக்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
அதுமட்டுமின்றி, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளை களைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.”
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.