திமுக ஆட்சியில் காவல் நிலைய மனித உரிமை மீறலில் எந்த சமரசமும் மேற்கொள்ளப்படாது. அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, ‘‘27-ம் தேதி வியாசர்பாடியைச் சேர்ந்த இளங்கோவை ஆட்டோவில் வந்த 5 பேர் வெட்டிக் கொன்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

கஞ்சா விற்பனை தொடர்பாக புகார் அளித்ததால் அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என்பதை நான் அவ்வப்போது கூறி வருகிறேன். அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். பாமக உறுப்பினர் அருள் இதே கருத்தை வலியுறுத்தினார்.

இதுதவிர, அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளின் பல்லைப் பிடுங்கிய சம்பவம் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இசக்கி சுப்பையா (அதிமுக), பிரின்ஸ் (காங்கிரஸ்), ஜவாஹிருல்லா (மமக), அருள் (பாமக), ஆளூர் ஷாநவாஸ் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வேல்முருகன் (தவாக) ஆகியோர் வலியுறுத்தினர்.

இவற்றுக்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: பெரம்பூர் தெற்கு பகுதி அதிமுக செயலாளர் இளங்கோவன், நேற்று முன்தினம் 5 பேர் கும்பலால் கத்தியால் வெட்டப்பட்டு இறந்தார். அவர் மனைவி சுமலதா கொடுத்த புகார் அடிப்படையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில், இளங்கோ 2 ஆண்டுகளுக்கு முன் சஞ்சய் என்பவரை பொது வெளியில் வைத்து தாக்கிய முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரியவந்தது. 2 மணி நேரத்தில், சஞ்சய் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்துள்ளனர். இளங்கோ, போதைபொருளுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லப்படுவது குறித்து விசாரணையில் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி விவகாரத்தில், குற்றச் செயலில் ஈடுபட்டு, விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட சிலரின் பற்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வந்ததும், சேரன்மாதேவி சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

சட்டம் ஒழுங்கில் சமரசம் இல்லை: காவல் நிலைய மனித உரிமை மீறலில் எவ்வித சமரசங்களையும் அரசு மேற்கொள்ளாது. அந்த வகையில், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட ஏஎஸ்பியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்ததும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், சாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. 2019-ல், கடந்த அதிமுக ஆட்சியில், 1,670 கொலை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், திமுக ஆட்சியில் 2022-ல் 1,596 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில், காவல்துறை சுதந்திரமாகவும், விரைவாகவும் செயல்பட்டு கொலையாளி, கொலை செய்யப்பட்டவர்களில் பாரபட்சம், அரசியல் பார்க்காமல் உரிய விசாரணை நடத்தி, கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

விசாரணைக்கு ஆஜரானவர் பிறழ் சாட்சியம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு செல்வோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளிப்பதாக புகார் எழுந்தது.

சில நாட்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டி சூர்யா (28) என்பவர், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்சினை செய்ததாக போலீஸார் பிடித்து சென்றனர்.

அப்போது அவரது பற்களை ஏஎஸ்பி பல்பீர்சிங் பிடுங்கியதாக சமூக வலைதளங்களிலும் செய்தி பரவியது.போலீஸார் தனது பல்லைப் பிடுங்கியதாக சூர்யாவும் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

இதுபோல் பலரது பற்களும் பிடுங்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமதுசபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் உத்தர விட்டார்.

இந்நிலையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த சூர்யா செய்தியாளர்களிடம் கூறும்போது, “கீழே தடுமாறி விழுந்ததால் எனது பற்கள் உடைந்தன. போலீஸார் தாக்கி பற்கள் உடையவில்லை. இதைத்தான் சார் ஆட்சியர் நடத்திய விசாரணையில் தெரிவித்தேன்” என்றார்.