நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி நெற்பயிரினை இதுவரை பயிர்க்காப்பீடு செய்யாத விவசாயிகள் நவ.15-க்குள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அரசு வேளாண்மை உற்பத்தி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வெள்ளம், புயலினால் ஏற்படும் பயிர் சேதத்தில் இருந்து, தமிழக விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக, நடப்பு 2021- 2022ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளை உரிய காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வேளாண்மை-உழவர் நலத்துறை மேற்கொண்டுவருகிறது.

மத்திய அரசு வழங்கிய வழிமுறை மற்றும் இத்திட்டத்திற்காக காப்பீட்டு நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய 26 மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிரை 15.11.2021க்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

இதற்கான முழு விவரத்தினையும் பல்வேறு ஊடகங்கள் மூலமாகவும், விரிவாக்க அலுவலர்கள் மூலமாக நேரடியாகவும் அனைத்து விவசாயிகளுக்கும் தெரியப்படுத்தி, அனைத்து சம்பா, தாளடி நெற்பயிர்களையும் பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் முன்னோடி விவசாயிகளும் தீபாவளி விடுமுறை, தொடர் மழையினால், சாகுபடிச் சான்று பெறுவதில் உள்ள இடர்ப்பாடுகளைக் குறிப்பிட்டு, இந்தக் காலக்கெடுவினை 15 நாட்கள் நீட்டிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்குக் கோரிக்கை வைத்தார்கள்.

அதனடிப்படையில், மேற்காணும் 26 மாவட்டங்களுக்கான சம்பா நெல் பயிர்க்காப்பீட்டை சிறப்பு இனமாகக் கருதி, பதிவுக்கான இறுதித் தேதியினை, 15.11.2021 லிருந்து 30.11.2021க்கு காலநீட்டிப்பு செய்யக் கோரி, பயிர்க்காப்பீட்டு நிறுவனங்களையும், மத்திய அரசினையும் 08.11.2021 தேதியிட்ட கடிதத்தின் மூலம் வேளாண்மை- உழவர் நலத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், எதிர்வரும் 15.11.2021க்குள் அனைத்து சம்பா, தாளடி நெற்பயிரினையும் காப்பீடு செய்து கொள்வதற்கு வசதியாகத் தமிழ்நாடு அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

1. எதிர்வரும் 13.11.2021 மற்றும் 14.11.2021 ஆகிய இரு விடுமுறை நாட்களில் விவசாயிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் காப்பீடு செய்வதற்கு ஏதுவாக, பொது சேவை மையங்கள் (e Seva Centre) இயங்கும். இதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

2. பயிர்க் கடன் பெறும் விவசாயிகளுக்காக, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் 13.11.2021 மற்றும் 14.11.2021 அன்று இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3. சம்பா, தாளடி நெல் சாகுபடிச் சான்றினை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

4. பயிர்க் காப்பீட்டுப் பதிவில் விவசாயிகளுக்கு உதவ, அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் செயல்படுவார்கள்.

5. மாவட்ட அளவில் இப்பணிகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழு கண்காணிக்கும்.

எனவே, பயிர்க் காப்பீட்டிற்காகத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்தகைய சேவையினை முழுவதும் பயன்படுத்தி, மேற்காணும் 26 மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்துள்ள வேளாண் பெருமக்கள் அனைவரும், காப்பீட்டுத் தொகையில் 1.5 சதவிகிதத் தொகையினை விவசாயிகளின் பங்குத் தொகையாக எதிர்வரும் 15.11.2021க்குள் செலுத்தி, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொண்டு, பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தமிழக அரசு வேளாண்மை உற்பத்தி ஆணையர் தெரிவித்துள்ளார்.