கடலூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை நாளன்று அந்த அறையின் சாவி தொலைந்துவிட்டதாக கூறி, பூட்டை அறுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதுதொடர்பாக மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் அளித்த மனுவில் பாதுகாப்பு அறையை திறப்பதற்கு முன்பாக எந்தக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைக்காமல் பூட்டை அறுத்து, கதவை திறந்த மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோமானது என குறிப்பிட்டிருந்தார். எனவே, வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென பிப்.23-ம் தேதி கோரிக்கை மனு கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் மாநகராட்சி 35-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில், ’அதிமுக வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கபடும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தியிருக்கலாம் அல்லது மாற்றியிருக்கலாம்.

பாதுகாப்பு அறை பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஆய்வு செய்ய வேண்டும். வாக்குப் பதிவு மற்றும் எண்ணிக்கையை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். மேலும் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கடலூர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலுக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், அதற்கு அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.