கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 110 டாலராக உயர்ந்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு அடுத்தவாரம் முதல் விலையேற்றம் இருக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. ஐரோப்பா முழுவதுமே போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது.

பல மாதங்களாக நிலையாக இருந்த நிலையில் அடுத்த வாரம் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைய உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயரும் என பிரபல நிதி ஆய்வு நிறுவனமான ஜேபி மோர்கன் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்கான ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. உத்தரகண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்குகளும் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்படுகிறது. எனவே கடைசி கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், பேரலுக்கு 110 டாலரைத் தாண்டியதால் இடைவெளியைக் குறைக்க பெட்ரோல்- டீசல் விலை லிட்டருக்கு ரூ.9 வரை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.

இதுகுறித்து ஜேபி மோர்கன் ஆய்வறிக்கை கூறப்பட்டுள்ளதாவது:

பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் தினசரி எரிபொருள் விலை உயர்வு மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். நவம்பர் முதல் விலையில் மாற்றம் இல்லை.

5 மாநிலத் தேர்தல்கள் அடுத்தவாரம் முடிவடைவதால், பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் தினசரி எரிபொருள் விலை உயர்வு மீண்டும் தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கலால் வரிக் குறைப்பு (பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 1-3) மற்றும் சில்லறை விலை உயர்வு (டீசல் லிட்டருக்கு ரூ. 5-8) செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. அதை மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கச்சா, டீசல் மற்றும் அந்நியச் செலாவணி ஆகியவற்றில் ஏற்ற இறக்கம் இருப்பதால், இந்த எண்கள் மாறும். நாளுக்கு நாள் மாறும் அளவுக்கு பெட்ரோல்- டீசல் விலையில் மாற்றம் இருக்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விற்பனை செய்யும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இயல்பான மார்க்கெட்டிங் மார்ஜின்களுக்கு திரும்ப வேண்டுமென்றால் சில்லறை விலை லிட்டருக்கு ரூ. 9 அல்லது 10 சதவீதம் அதிகரிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

இதனை சமன் செய்யும் அளவுக்கு தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புண்டு என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

தற்போது சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ. 101.40 ஆகவும், டீசல் விலை ரூ.91.43ஆக விற்பனை செய்யப்படுவது. மார்ச் 8ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற பின் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.