“ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவை அனைத்தையும் ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என்ற மின்சார வாரியத்தின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கெனவே மின் கட்டணத்தை உயர்த்தி மின்நுகர்வோர் தலையில் சுமையை ஏற்றியது. இத்துடன் இல்லாமல் தொடர்ந்து புதுப் புது தாக்குதல்களை தொடுத்து மின் நுகர்வோரை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. ஒரே வளாகத்தில் குடியிருப்பவர்கள் தனித்தனியாக மின் இணைப்பினை இதுவரை பெற்று வந்துள்ளார்கள். ஆனால், தற்போது ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவை அனைத்தையும் ஒரே மின் இணைப்பாக மாற்ற வேண்டும் என மின் நுகர்வோர்களுக்கு மின்சார வாரியம் நோட்டிஸ் வழங்கி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் மூலம் இதுவரை அனுபவித்து வரும் தலா 100 யூனிட் இலவச மின்சாரம் பறிக்கப்படும். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் அனைத்தையும் ஒரே மின் இணைப்பாக மாற்றுவதன் மூலம் கட்டண விகிதம் மாற்றப்பட்டு மின் கட்டணம் பல மடங்கு உயரும் ஆபத்து ஏற்படும்.
மேற்கண்டவாறு மாற்றவில்லையெனில், மின் இணைப்புகள் 1-D இணைப்பாக (ஒரு யூனிட்டுக்கு ரூ.8/-) மாற்றப்படும் என மின்வாரியம் நோட்டிஸ் வழங்கி வருகிறது. இது மின்நுகர்வோருக்கு மின்சாரம் தாக்கியது போல் உள்ளது. இதனால், சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்களும் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
மின் இணைப்புகளை ஆதார் அட்டையுடன் இணைக்க வற்புறுத்தியபோது பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இவ்வாறு இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் பறிக்கப்படாது எனவும், இதனால் மின்நுகர்வோருக்கு வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மின்சாரத் துறை அமைச்சர் அறிவிப்பு செய்தார். ஆனால், இதற்கு நேர்மாறாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கண்டனத்திற்குரியதாகும்.
ஒரே வளாகத்தில் குறைந்தபட்சம் நான்கு குடியிருப்புகள் இருக்கும்பட்சத்தில் அங்கு பொது பயன்பாட்டிற்காக அதாவது, லிப்ட், மின் விளக்குகள், மோட்டார்களுக்கு ஒரு பொது இணைப்பு வைத்து கொள்வதற்கும் அந்த மின் இணைப்பிற்கு வீடுகளுக்கான கட்டண விகிதமே இதுவரை விதிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், தற்போது மின்சார வாரியம் 1-D என்ற புதிய கட்டண விகிதத்தை புகுத்தி மேற்கண்ட பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு ஒரு யூனிட் ஒன்றிற்கு ரூ.8/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மேலும் கூடுதல் கட்டண சுமை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கண்ட அறிவிப்புகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வற்புறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.