பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 17ம் தேதியில் முகூர்த்தக் கால் ஊன்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பிப்ரவரி 21ம் தேதி திருக்கம்பம் சாட்டுதல், பிப்ரவரி 28ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (மார்ச் 7) இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 3 மணிக்கு அம்பாள் கொலுவிருத்தல் நடந்தது. தொடர்ந்து மாலையில் பத்மசாலா ஜாதியார் மூலவர் திருக்கல்யாணத்திற்கு பொட்டும், காரையும் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் தங்கக்குதிரை வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பழநி வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் 34-வது ஆண்டாக பாத விநாயகர் கோயிலில் இருந்து நான்கு ரத வீதி வழியாக மாரியம்மன் கோயில் வரை பூச்சொரிதல் தேர் பவனி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று (மார்ச் 8) மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. நாளை (மார்ச் 9) நீராடல் மற்றும் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.