தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்து இருப்பதால் மலை மீது நடைபெறும் தங்கத் தேர் புறப்பாடு நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்து வந்தும் முருகனை தரிசனம் செய்கின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமார சுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நாளை மாலை பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து சனிக்கிழமை மாலை தைப்பூச திருவிழா தோரோட்ட நிகழ்ச்சி நான்கு ரதவீதியில் நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவுக்காக பழனிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இன்று முதல் வருகிற 6-ம் தேதி வரை மலை கோயிலில் நடைபெற கூடிய தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.