சென்னை: மின்சார ரயில்கள் கால அட்டவணை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாற்றப்பட்ட கால அட்டவணை கடந்த 14-ம் தேதி அமலுக்கு வந்தது.

இதில், மொத்தம் 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், புறநகர் மின்சார ரயில்களின் கால அட்டவணையில் சில மாற்றங்கள் செய்து, ஓரிரு மாதங்களில் வெளியிடப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ரயில்வே கோட்டத்தில் பல இடங்களில் மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோல, ரயில் பாதை புதுப்பித்தல் பணிகளும் நடைபெறுகின்றன. எனவே, இந்த பணிகளை விரைந்து முடிக்க,சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

அதன்.படி, புதியகால அட்டவணை வெளியிடப்பட்டது. நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மீண்டும் தொடங்க கோரி மனுக்கள் அளித்து வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கும் வகையில், கூடுதல் ரயில் சேவைகளுடன் அடுத்த ஓரிரு மாதங்களில் திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.