தஞ்சாவூர்: நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா, தாளடியில் சுமார் 3.43 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் அறுவடைப் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் இதுவரை 358 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, 20,193 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், போதிய அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. தேவைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அம்மாபேட்டை அருகே விழுதியூர் ஊராட்சியில், கடந்த ஆண்டு இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டது. தற்போது, ரெங்கநாதபுரத்தில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு வாரமாக நெல்லை விவசாயிகள் கொட்டி வைத்துக் காத்துக் கொண்டு உள்ளனர்.

எனவே, விழுதியூரில் கூடுதலாக கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையிலான விவசாயிகள், நெல்லை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.