தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ், அதிகமான உருமாற்றத் தன்மையுடையதாகவும், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம் என்று தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாலா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, கட்டுக்கோப்பில் வைக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்திலிருந்து திடீரென கரோனா தொற்று நாள்தோறும், 1,200 அளவில் அதிகரித்து, நேற்று 2,465 ஆக அதிகரித்துவிட்டது.

முதலில் பிரிட்டோரியாவிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்கள், ஸ்வானே மெட்ரோ நகரம் ஆகியபகுதிகளில் கரோனா தொற்று அதிகமாக இருந்தது. அதன்பின் அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது.

இந்த புதிய வகை கரோனா வைரஸ் அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாகவும், உருமாற்றங்கள் அதிகம் கொண்டதாகவும் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதிகமான உருமாற்றத்தை அடைகிறதா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த புதிய வைரஸுக்கு பி.1.1.529 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து போட்ஸ்வானா, ஹாங்காங் சென்ற பயணிகள் உடலில் இந்த கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு ஜோ பாலா தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவின் கரோனா வைரஸ் கண்காணிப்புக் குழுவின் தலைவர் டுலியோ டி ஓலிவிரா கூறுகையில் “ புதிதாகக் கண்டறியப்பட்ட கரோனா வைரஸுக்கு பி.1.1.529 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்த புதிய வைரஸ் அதிகமான அளவில் உருமாற்றம் அடையக்கூடும் என்று முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது, அதேநேரம், பரவுவதும் அதிவேகமாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில வாரங்களில் நாட்டின் சுகாதாரத்துறைக்கு பெரும் நெருக்கடிகள், அழுத்தங்கள் ஏற்படலாம்” எனத் தெரிவித்தார்