மக்களவைத் தேர்தலையொட்டி, திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். திமுகவின் முக்கிய வாக்குறுதிகள்:

  • மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை திமுக மத்தியில் அமையும் புதிய ஆட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தும்.
  • ஆளுநர்களை நியமனம் செய்யும்போது மாநில முதல்வரின் ஆலோசனையுடன் நியமித்திட புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 361-ஐ நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆளுநரும் சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டவர் என்ற நிலை உருவாக்கப்படும்.
  • மாநில அரசுகளை கலைத்திட வழிவகுக்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 365-ஐ அகற்றிட திமுக தொடர்ந்து வலியுறுத்தும்.
  • உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
  • புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத்தந்திட திமுக முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ளும்.

மத்திய அரசுப் பணிகளுக்கும், மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கு தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளின் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கு புதிய அரசு ஆவன செய்யும்.

 

 

  • தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் தமிழில் செயல்பட வேண்டும். இதற்காக அரசமைப்புச் சட்டம் 343-ல் உரிய திருத்தம் கொண்டு வர புதிய அரசு நடவடிக்கை எடுக்கும்.
  • இண்டியா கூட்டணி ஆட்சி அமையும்போது அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி ஒதுக்கப்படும்.
  • தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஏற்று மத்தியில் அமையும் புதிய அரசு ஆணை பிறப்பிக்கும்.
  • உலகப் பொது மறையான திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட புதிய அரசு ஆவன செய்யும்.

35 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு புதிய அரசு ஆவன செய்யும். இலங்கை திரும்பிச் செல்ல விரும்புவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

 

 

  • சேது சமுத்திரத் திட்டம் முழுமையாக நிறைவேறவும், தென் தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெறவும், இந்திய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்தியில் அமையும் புதிய அரசு ஆவன செய்யும்.
  • உச்ச நீதிமன்றம், சிஏஜி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள் எவ்வித அரசியல் தலையீடு இன்றி, தன்னிச்சையாக செயல்படுவது உறுதி செய்யப்படும்.
  • புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன் அதனை ரத்து செய்திட ஆவன செய்யும்.
  • சிறப்பாக செயல்படவும், நிர்வாக வசதிக்காகவும் ரயில்வே நிர்வாகம் படிப்படியாக மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  • நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர் இடஒதுக்கீடு 33 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்.

இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கிகளில் பெற்றிருக்கும் கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்படும்.

  • மாணவர்களின் கல்விக்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.
  • அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
  • தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.
  • பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் நியமனத்தை, இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே மேற்கொள்ளும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
  • குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA-2019) ரத்து செய்யப்படும்.
  • கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு ஜிபி அளவில் கட்டணமற்ற இலவச சிம் கார்டு வழங்கப்படும்.

மாநிலங்களில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

  • வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
  • மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் இலவச வைஃபை சேவை வழங்கப்படும்.
  • ஏழை எளிய நடுத்தர மக்களும் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்த உதவும் வண்ணம் விமானக் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
  • இந்தியாவில் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell) மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.
  • கச்சத்தீவை மீட்க வழிவகை செய்யப்படும்.

பணி ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இணைய 2 ஆண்டுகள் காத்திருப்புக் காலமாக அறிவித்து புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.

 

 

  • ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். அம்மாநில சட்டமன்றத்துக்கு உடனடியாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும்.
  • கல்வி மற்றும் சுகாதாரம் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படும்.
  • மாநிலக் கல்வி நிறுவனங்களின் மீது திணிக்கப்படும் மத்திய அரசின் அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படும்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்திய அரசின் திட்டம் கைவிடப்படும்.
  • மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வட்டி இல்லாக் கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.

பயிர் காப்பீட்டுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை அரசே செலுத்தும். இத்திட்டம் செங்கரும்பு பயிரிடுவோருக்கும் விரிவாக்கப்படும்.

  • தேசிய அளவில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்படும்.
  • பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும், கேஸ் ரூ.500-க்கும் வழங்கப்படும்.
  • MSME-க்கான வருமான வரிச்சட்டம் 43(h) பிரிவு நீக்கப்படும்.
  • ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் மீண்டும் உருவாக்கப்படும்.
  • சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
  • மீனவர்கள் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.
  • பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.

MGNREGA திட்டத்தின் கீழ் வேலை நாட்கள் 150-ஆக அதிகரிக்கப்படும். நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரூ.400 ஊதியம் வழங்கப்படும்.

 

 

  • மின்சார வாகனத்துக்கான மானியம் உயர்த்தப்படும்.
  • மாநிலங்களுக்கு தற்போது மத்திய அரசு வழங்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி 90 சதவீதமாக உயர்த்தப்படும்.
  • கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 124 நீக்கப்படும்.
  • விஸ்வகர்மா திட்டம் சமூக நீதி அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும்.
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு இனிவரும் காலங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் மாநிலங்களுக்கான நிதி பங்களிப்பு அந்தந்த மாநிலங்களில் வசூலாகும் வருமான வரி, ஜிஎஸ்டி ஆகியவற்றின் அடிப்படையில் உறுதி செய்யப்படும்.

  • ஜிஎஸ்டி வரி வசூல் முழுமையாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு மாநிலங்களுக்கான பங்களிப்பு போக மீதமுள்ள தொகை மத்திய அரசுக்கு வழங்கப்படும்.
  • ஆன்லைன் மருந்து விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படும்.
  • மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி விரைந்து முடிக்கப்படும். தமிழகத்தில் மேலும் 4 மண்டலங்களிலும் எய்ம்ஸ் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மேகேதாட்டு அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும்.
  • அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும். நிரந்தர ஆட்சேர்ப்புப் பணி மீண்டும் கொண்டுவரப்படும்.