சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஜூன் 12, 13 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச்  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.