மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியைக் கூட ஒழுங்காகத் தர இயலாத திறமையற்ற அரசாக திமுக விளங்கிக் கொண்டிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தை மனதில் நிலைநிறுத்தி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அரசாக அதிமுக அரசு விளங்கியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான எட்டு அகவிலைப்படி மாநில அரசு ஊழியர்களுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்படாத நிலையில், அதனைச் சரிசெய்யும் வகையில் மத்திய அரசு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படியை அறிவிக்கிறதோ அப்பொழுதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அறிவிக்கும் நடைமுறையைக் கொண்டுவந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை எத்தனையோ நிதி நெருக்கடிக்கு, இடையிலும் ஒரு தவணையையும் விட்டுவைக்காமல் அளித்தார். இது மட்டுமல்லாமல், 2006-ம் ஆண்டு ஊதியத்தின் ஐம்பது விழுக்காடு அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து, ஊதியம் மற்றும் படிகளில் மிகப் பெரும் அளவிலான திருத்தத்தைக் கொண்டுவந்தவர் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து, 2017-ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஊதியக் குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் பேரில் 15,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊதிய உயர்வை வழங்கிய அரசு அதிமுக அரசு.
இது தவிர, வீட்டுக் கடன், வாகனக் கடன், கணினிக் கடன், அப்பழுக்கற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகை போன்றவற்றை அவ்வப்போது உயர்த்தி, பெண் அரசு ஊழியர்களுக்கான சலுகைகளையும் அவ்வப்போது வழங்கியவர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சியில் இருந்தவரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. அரசு ஊழியர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.
உண்மை நிலை இவ்வாறிருக்க, அண்மையில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ஏதோ திமுகதான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறைய செய்தது போலவும், கடந்த பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சீரழித்துச் சூறையாடியதுமான ஒரு ஆட்சி நடந்ததாகவும் கூறி இருக்கிறார். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 2011 முதல் 2021 வரையில் நடைபெற்ற ஆட்சி மக்களுக்கான ஆட்சி. விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், ரமலான் மாதத்தில் பள்ளி வாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம், அனைத்து மதத்தினரும் தங்கள் புனிதத் தலங்களுக்குச் செல்ல மானியம் வழங்கும் திட்டம், ஏழைகள் பசி போக்க அம்மா உணவகங்கள், குறைந்த விலையில் காய்கறிகள் வழங்கும் பசுமை பண்ணை நுகர்வோர்க் கடைகள், அம்மா மருந்தகங்கள், முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் என அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம், ஏழைத் திருமணப் பெண்களுக்கு ரூ.50,000 நிதி உதவியுடன் கூடிய எட்டு கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழை மக்களுக்கு கறவைப் பசுக்கள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லாக் கல்வி, விலையில்லா புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பை, காலணி, கணித உபகரணப் பெட்டி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, கட்டணமில்லா பேருந்து வசதி, முதல்வர் காப்பீட்டுத் திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கிய ஆட்சி அதிமுக ஆட்சி.
இந்தியாவிலேயே இதுவரை யாரும் சாதித்திராத அளவுக்கு ஒரே ஆண்டில் மத்திய அரசின் நிதி உதவியுடன் 11 மருத்துவக் கல்லூரிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கொண்டுவரப்பட்டன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை சாத்தியமானதும் அதிமுக ஆட்சியில்தான். 54 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்டத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்ததும், 118 கிலோ மீட்டர் நீளத்திலான மூன்று வழித்தடங்கள் அடங்கிய மெட்ரோ இரண்டாவது கட்டப் பணிகள் தொடங்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில்தான்.
அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் சீரான, அமைதியான, நேர்மையான, தமிழகத்தையும், தமிழ்நாட்டையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் மக்கள் நல ஆட்சியை அளித்தது. அதிமுக அதனால்தான், பல்வேறு துறைகளில் மத்திய அரசினுடைய விருதினை தமிழ்நாடு பெற்றது. இது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தில் இருந்து வருகிறது.
மேற்கண்ட திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவதற்கு கடன் வாங்கப்பட்டது என்பது உண்மைதான். நாங்கள் ஆட்சியை விட்டுச் செல்லும்போது, அதாவது 31-03-2021 நாளன்று 4 லட்சத்து 82 ஆயிரத்து 502 கோடி ரூபாய் கடன் இருந்தது என்பதும், இது 2021-22ஆம் ஆண்டில் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்பதும் தெளிவாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதையெல்லாம் தெரிந்துகொண்டு தானே “புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்” என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியைக் கூட ஒழுங்காகத் தர இயலாத திறமையற்ற அரசாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது. என்ன ஏமாற்று வேலை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1988-ம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, 70 ரூபாய் இடைக்கால நிவாரணம் ஆளுநர் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன.
அப்போது குறைந்தபட்ச ஊதிய உயர்வு வெறும் 100 ரூபாய்தான். ஆளுநர் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட இடைக்கால நிவாரணமான 70 ரூபாயைக் கழித்துவிட்டால் நிகர ஊதிய உயர்வு வெறும் 30 ரூபாய்தான். அப்போது நடைபெற்ற அரசு ஊழியர்கள் மாநாட்டில் பேசிய அப்போதைய முதல்வர், “ஆளுநர் பேனா கொடுத்தார், அதை மூடிபோட்டு மூடினேன்” என்றார். அவர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், அதிமுக கொடுத்துச் சென்ற மூடியுடன் கூடிய பேனாவை முக்காலாக்கி விட்டார், அதாவது மூடியை எடுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
கரோனா காலகட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின் வருவாய் – கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஏற்ப, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியையும், ஈட்டிய விடுப்பிற்கு பதில் ஊதியம் பெறும் உரிமையையும் ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், இப்போது அதைவிட பன்மடங்கு கூடுதல் வருமானம் வருகின்ற இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியைக் கூட அளிக்கத் தயக்கம் காட்டுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், மாநிலப் பொருளாதாரத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்ட “முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு” ஒன்று அமைக்கப்பட்டது. மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவிற்கு துணைத் தலைவரையும், உறுப்பினர்களையும் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நியமித்தது. ஆனால், இந்தக் குழுக்களின் கூட்டங்கள் கூட்டப்பட்டதா என்பது குறித்தும், பரிந்துரைகள் அளிக்கப்பட்டதா என்பது குறித்தும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
கோவிட்-19 பெருந்தொற்று நோயின் தாக்கம் முடிந்தவுடன் தமிழகத்தின் கடன் சுமை தாமதமின்றி சரி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போது கோவிட்-19 பெருந்தொற்று கணிசமாக குறைந்து, பள்ளிகளெல்லாம் திறந்துள்ள சூழ்நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாவது ஆளுநர் உரை சமர்ப்பிப்பதற்கான தேதி குறிப்பிட்டுள்ள நிலையில், சீர்திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டனவா என்பது குறித்தும் தகவல் இல்லை.
தமிழக அரசின் வருவாயைப் பெருக்குவதிலோ, சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலோ, சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதிலோ எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. மொத்தத்தில் ஒரு திறமையற்ற அரசாக காணப்படுகிறது. உண்மை நிலை இவ்வாறிருக்க, அதிமுக மீது வீண் பழி போடுவதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
மத்திய அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய வருவாய் மற்றும் நிவாரணத்தைப் பொறுத்தவரையில், தொடர்புடைய மத்திய அமைச்சர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்துவதும், தேவையான அழுத்தத்தைக் கொடுப்பதும், திமுகவைச் சார்ந்த 34 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பி வற்புறுத்தச் சொல்வதும், அதன் வாயிலாக வருவாயைப் பெறுவதும்தான் நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டு. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் திமுக அரசு கவனம் செலுத்தாமல் அதிமுகவைக் குறை சொல்வது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்குச் சமம்.
அதிமுக அரசு மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்திருந்தால், திறமையோடு செயல்பட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை நிச்சயம் வழங்கியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு ஊழியர்களின் நண்பன் யார் என்பதை இனிமேலாவது அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், ஓய்வூதியதாரர்களும் புரிந்து கொள்வார்கள் என்று கருதுகிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.