தமிழக அரசு மின் கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வீடுகளுக்கான மின் கட்டணத்தை 27 சதவீதம் வரை உயர்த்தி தமிழக மின்சாரத் துறை அமைச்சர் அறிவித்துள்ளது ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மக்களை வஞ்சிக்கும் இந்த அறிவிப்பை உடனே வாபஸ் பெற வேண்டும்.

வீடுகளுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.55-லிருந்து, பயன்படுத்தும் யூனிட்டுக்கு ஏற்ப ரூ.1,130 வரை கட்டணம் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உட்பட வணிகப் பிரிவுகளுக்கும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அனைத்துப் பொருட்களின் விலை உயர்வால் அன்றாட வாழ்வை நகர்த்தப் போராடிக் கொண்டிருக்கும் ஏழை, நடுத்தர மக்களை இந்த அறிவிப்பு, மேலும் பரிதாபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், வாடகை வீடுகளுக்கான இணைப்புகளுக்கும் கூடுதல் கட்டணம் என்று அறிவிப்பு, வாடகை குடியிருப்புதாரர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்.

அதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு அறிவிப்பு வந்தபோது, போர்க்கோலம் பூண்ட திமுக, இப்போது தங்கள் ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி, ஏழை, நடுத்தர மக்களை வஞ்சிக்கிறது. மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டுவரப்போவதாக வாக்குறுதி அளித்த திமுக, அதை வசதியாக மறந்துவிட்டு, மின் கட்டணத்தை மட்டும் கடுமையாக உயர்த்தியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மின் வாரிய நிதியிழப்பும், கடனும் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், மத்திய அமைச்சகத்தின் நெருக்கடியால்தான் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டியிருப்பதாகவும் காரணம் கூறியிருக்கிறார். நிர்வாகச் சீரமைப்பு, மின் திருட்டு, விநியோகத்தின்போது ஏற்படும் மின் இழப்பைத் தடுப்பது, ஊழல், முறைகேடுளைக் களைவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் மின் வாரியத்தைக் கடனிலிருந்து மீட்க வேண்டுமே தவிர, மக்கள் தலையில் சுமையை ஏற்றிக்கொண்டே செல்வது நியாயமற்றது.

எனவே, மின் கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். அனல் மின் நிலைய உற்பத்தியில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சூரிய ஒளி, காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரித்து, உற்பத்தி செலவைக் குறைக்க மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். மாநில அரசுகளின் சிரமங்களைப் புரிந்துகொள்ளாமல், தேவையற்ற நடைமுறைகளைப் புகுத்தி, நெருக்கடி கொடுப்பதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஆட்சியாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களைப் பாதித்து, மத்திய, மாநில அரசுகள் மீதான கோபத்தை அதிகரித்து வருகின்றன. இலங்கையில் நடைபெற்ற புரட்சியை ஆளுங்கட்சியினர் மறந்துவிடக் கூடாது. மக்களை வாட்டி வதைக்கும் செயல்களைத் தொடருவதை உடனே நிறுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது” என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.