மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளை நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் ஜூலை 28-ம் முதல் ஆக. 10-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, தமிழக அரசு சார்பில் பல்வேறு அமைச்சர்கள் நாள்தோறும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் செஸ் போட்டி நடைபெற உள்ள அரங்கத்தை நேற்று பார்வையிட்டனர்.

பின்னர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநிலம், மாவட்டம் மற்றும் வட்டார அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு இதன்மூலம் 152 மாணவ, மாணவிகள் போட்டிகளை நேரில் பார்வையிட தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும், சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கி தரப்பட உள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களிலிருந்து வரும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பாக அமையும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், கதர் வாரிய தலைமை நிர்வாக அலுவலர் பொ.சங்கர், ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலைகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் நேற்று ஆய்வு செய்தார்.

குரோம்பேட்டை ரேடியல் மேம்பாலத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் 200 அடி சாலையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் ஆறடி உயர மரக்கன்றுகளை நடும் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

எஸ்பி தலைமையில் ஆலோசனை

வீரர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலை வழியாக மாமல்லபுரத்துக்கு வருகின்றனர்.

அவ்வாறு வரும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க போக்குவரத்து மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட எஸ்பி சுகுணா சிங் தலைமையில் போலீஸாரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 5 மாவட்டங்களின் எஸ்பி-க்கள், ஏடிஎஸ்பி-க்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸார் பங்கேற்றனர்.

மாணவர்களுக்கு போட்டி

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற செஸ் போட்டிகள் நடந்தன. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 5 ஒன்றியங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 50 பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரத்தில் நடந்த போட்டியை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார்.