ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது ஆளுநர் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாது” என்று தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணல் அம்பேத்கர் இந்த நாட்டின் பெருமை. நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இது அவருக்கு பெருமை அல்ல… இந்த நாட்டு மக்களுக்கு பெருமை. பாஜக அம்பேத்கரை கொண்டாடுவதற்கு காரணம், வாக்குதான்.

என்எல்சி நிலம் எனது வளம். ஆனால், வேலைவாய்ப்பு வேறு ஒருவருக்கு. அதை எதிர்த்துப் போராடப்போகிறோம். அனைத்து இடங்களிலும் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு குடும்ப அட்டை கொடுங்கள். ஆனால், வாக்காளர் அட்டை கொடுக்காதீர்கள்.

ஆளுநர் 6-வது விரல். அதை வெட்டி எறிய வேண்டும். ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது ஆளுநர் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாது. ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா தொடர்பாக அரசு எடுக்கிற முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைக்கவில்லை” என்று அவர் கூறினார்.