தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறார் அஜித்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்துக்காக வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகளுக்காக விரைவில் ரஷ்யா பயணிக்கவுள்ளது படக்குழு. அத்துடன் முழுபடப்பிடிப்பும் முடிவடைந்துவிடும்.

சமீபமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். இதற்காகப் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சென்னை துப்பாக்கி சுடுதல் கிளப்புக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அஜித்.

இந்த வெற்றிக்காக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் அஜித்தைப் பாராட்டியிருந்தார்கள். மாநில அளவிலான வெற்றிக்குப் பிறகு தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கவுள்ளார் அஜித்.

இந்தப் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

இதற்காக படப்பிடிப்பு இல்லாத சமயங்களில், தீவிரமாகத் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து வருகிறார். கண்டிப்பாக பதக்கம் ஜெயித்துவிடுவார் என்று அவருடைய ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அப்படி பதக்கம் ஜெயித்தால் தமிழ்நாட்டுக்கே பெரும் சேர்க்கும் விஷயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.