‘அப்பத்தா’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரபுதேவா சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘அப்பத்தா’ பாடல் அண்மையில் வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படம் குறித்து நடிகர் வடிவேலு பேசுகையில், “நாய் சேகர் பெயரையே வைத்துவிடலாம் என முடிவெடுத்தோம். அதற்கு நிறைய தடைகள் வந்தன. அதையெல்லாம் எதிர்த்து ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என பெயர் வைத்தோம். ஒருவழியாக படம் டிசம்பர் 9-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் மொத்த பாடலையும் நான்தான் பாடவேண்டும் என இயக்குநர் சுராஜ் அடம்பிடித்தார். அதனால் எல்லா பாடலையும் என்ன பாட வைத்துவிட்டார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

நானே பாடி, நானே ஆடியும் இருக்கிறேன். பிறகு யாரை கோரியோகிராபர் ஆக்கலாம் என யோசித்தபோது, பிரபுதேவாவை நாடினோம். அவர் ‘நான் கோரியோகிராஃபி செய்யாமல் யார் செய்வார்’ என அவர் உள்ளே வந்தார். பிரபுதேவா சம்பளம் வாங்கவில்லை. 4 நாட்கள் ‘அப்பத்தா’ பாடலுக்கு சிறப்பாக நடனத்தை அமைத்துக் கொடுத்தார்.

படத்தில் வேலை பார்த்தவர்கள் அனைவரும் ரசிகர்களாக உள்ளே வந்தார்களே தவிர, தொழில்நுட்ப கலைஞர்களாக வரவில்லை. சந்தோஷ் நாராயணனும் ‘நான் தான் இந்த படத்திற்கு இசையமைப்பேன். என் குடும்பமே உங்க ரசிகர்கள்’ என்றார் அவர்” என்று வடிவேலு கூறினார்.