புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது யார் என்பதை கண்டறிய ஒளிவு மறைவின்றி விசாரிக்கப்பட்டு வருகிறது என திருச்சி மண்டல ஐஜி தெரிவித்தார்.

வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருந்தது கடந்த ஆண்டு டிச. 26-ம் தேதி தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது யார் என்று கண்டுபிடிப்பதற்காக திருச்சி டிஐஜி சரவண சுந்தரால் அமைக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் தலா 2 டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை குழுவினருடன் திருச்சி ஐஜி க.கார்த்திகேயன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அவர் கூறும்போது, “வேங்கைவயல் பிரச்சினை குறித்து அதிகப்படியான சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையானது ஒளிவு மறைவின்றி வெளிப்படை தன்மையுடன், முழு முயற்சியுடன் நடைபெற்று வருகிறது. மேலும், குடிநீர்த் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியானது தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.