தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீடு எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உயிரிழந்த மாற்றுத்திறன் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டதை ஆணையம் உறுதி செய்துள்ளது.

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் வேளாண் விரிவாக்க மையத்தில் பணியாற்றி வந்த 24 வயது மாற்றுத் திறன் பெண் ஒருவர், அருகில் உள்ள வீடு ஒன்றின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.

கழிவறை இல்லாததால் விபரீதம்

கடந்த 2020-ம் ஆண்டு டிச. 7-ம்தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அப்பெண் பணியாற்றும் கட்டிடத்தில் கழிவறை வசதி இல்லாததால், அருகில் உள்ளவீட்டின் கழிவறையை பயன்படுத்தும்போது, அருகில் இருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்தது தெரியவந்தது.

தலைமைச் செயலருக்கு உத்தரவு

இதுதொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் வழக்காக பதிவு செய்து, அந்த நிகழ்வு தொடர்பாக தலைமைச் செயலர் பதில் அளிக்கஉத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.13 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டதை தேசிய மனித உரிமை ஆணையம் உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய மனிதஉரிமை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீடு காரணமாக, காஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாற்றுத் திறனாளி வேளாண் பணியாளரின் பணிப் பலன்கள் மற்றும் முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரணம் உட்பட ரூ.13 லட்சம்,சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சகோதரிக்கு அரசுப் பணி

அந்த பணியாளரின் சகோதரிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் கழிவறைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகிறது என்றுதமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, வேளாண் விரிவாக்க மையங்களில் கழிவறை கட்டும் பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.