காலனிய ஆந்திரத்தின் அடிலாபாத்தில், கோண்டு இனக் குழுவைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமம் ஒன்றுக்கு மனைவியுடன் வருகிறார் டெல்லியின் வெள்ளை ஆளுநரான ஜெனரல்ஸ்காட். திரும்பிச் செல்லும்போது மல்லிஎன்கிற பழங்குடிச் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, தனது மாளிகையில் அடைத்து வைத்துக்கொள்கிறார். மல்லியை மீட்டுவர இனக்குழுவின் ‘காப்பான்’ ஆக இருக்கும் பீம் (ஜூனியர் என்.டி.ஆர்) டெல்லிக்கு வருகிறான். இன்னொரு பக்கம், தன்னுடைய தந்தை பயிற்சியளித்த கிராம மக்கள் ஒவ்வொருவருக்கும், ஆங்கிலேயரிடமிருந்து தந்திரமாக கவர்ந்து சென்றுஆயுதம் கொடுக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் பிரிட்டிஷ் போலீஸில் அதிகாரியாக வேலை செய்கிறான் கோதாவரி தீரத்தைச் சேர்ந்த ராம் (ராம் சரண்). இரண்டு வெவ்வேறுநோக்கங்களைக் கொண்ட இருவரும் எப்படி நண்பர்கள் ஆனார்கள்? அவர்களுடைய பொது எதிரியான ஜெனரல் ஸ்காட்டையும், அவருடைய படையையும் எப்படி நிர்மூலம் ஆக்கினார்கள் என்பது கதை.

1920-களில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில், கதாநாயகர்கள் இருவருக்குமான அறிமுகக் காட்சிகள் ‘ராஜமவுலிமுத்திரை’யுடன் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ‘ஒரு இந்தியனின் உயிரைவிட விலைமதிப்பு மிக்கது லண்டனில் தயாராகும் தோட்டா. இந்தியனின் உயிரைப் போக்க தோட்டாவைப் பயன்படுத்தாமல் மாற்றுவழியைப் பயன்படுத்து!’ எனும் ஜெனரல் ஸ்காட்டின் அறிமுகமும் கூட நச்! நாயகர்கள் இருவரும் நண்பர்களாக ஆகும் புள்ளி, ஒருமிகை நாயக ஆக்‌ஷன் காட்சியில் தொடங்குகிறது. நாயகர்கள் முரண்பட்டு நிற்கும் இடைவேளைக் காட்சி திருப்பத்திலும்கூட ‘அடேங்கப்பா’ என்று சொல்ல வைக்கிறார்.

ஆனால், இடைவேளைக்குப் பிறகு ராஜமவுலியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இரண்டாம் பாதி முழுவதும் வெகு எளிதாக ஊகித்துவிடக்கூடிய, தெலுங்கு மாஸ் மசாலாவின் மிகை நாயகக் காட்சிகள் வரிசை கட்டுகின்றன. ஆயிரம் அடிக்கு ஒரு ஆக்‌ஷன் சீக்குவென்ஸ் என்கிற கணக்கோடு சண்டைக் காட்சிகளை உருவாக்கிவிட்டு, அவற்றுக்காக எழுதியதுபோல் பல்லிளிக்கிறது திரைக்கதை. அதில் தேசபக்தி, பரிதாபகரமாக களபலியாகியிருப்பது இன்னும் சோகம்!

‘நான் ஈ’ எனும் நேர்த்தியான ஆக்‌ஷன் படம் கொடுத்தவர், ‘பாகுபலி’யில் ஆக்‌ஷன் மசாலா காட்சிகளைக்கூட நம்பும்படியாக அமைத்தவர், இதில், நம்ப முடியாத பல காட்சிகளை வைத்து, இவ்வளவு அசால்ட்டாக காதில் பூ சுற்றுவார் என்று எதிர்பார்த்திருக்க முடியாது.

ஆந்திர மண்ணின் சுதந்திரப் போராட்ட முன்னோடிப் போராளியின் பெயர்களை மட்டும் பயன்படுத்திக்கொண்ட புத்திசாலித்தனத்துக்காக இயக்குநரைப் பாராட்டலாம். இறுதிக் காட்சியில் ராமனைப் போலவே ஆடை தரித்து வில்லில் இருந்து அம்புகளை எய்து ஆங்கிலேயப் படையினரை கொத்தாகராம் சரண் வீழ்த்தும்போது ஃபேன்டஸி படமாக பல்டி அடிக்கிறது படம்.

ஜூனியர் என்.டி.ஆர் வெள்ளந்தியான ஆனால் தன் நோக்கத்துக்காக வெகுண்டு கர்ஜிப்பவராக கவர்கிறார். காவல் அதிகாரியாக ராம்சரண் கம்பீரம் காட்டுகிறார். இருவரும் அதிரடியாக நடனமாடியிருப்பதுடன் சிறந்த முறையில் முயன்று தமிழில் ‘டப்பிங்’ பேசியிருப்பதற்காகவும் பாராட்டலாம்.

கவுரவத் தோற்றத்தில் வரும் அஜய் தேவ்கனும், ஆலியா பட்டும் ‘பான் இந்தியா’ பட பார்முலாவுக்கான பரிதாபங்களாக ஆகியிருக்கிறார்கள். சமுத்திரக்கனியோ இன்னும் ஒருபடி கீழேபோய் மிச்ச சொச்சமாக ஆகியிருக்கிறார். ஆங்கில ஆளுநர் குடும்பத்தை சேர்ந்த ஜென்னியாக வரும் ஒலிவியா மோரிஸ், ஆங்கில ஆளுநராக நடித்திருக்கும் ரே ஸ்டீவன்சன், அவரது மனைவியாக நடித்துள்ள ஆலிசன் டோடி ஆகியோர் தங்கள் பங்களிப்பை திறம்படத் தந்திருக்கிறார்கள்.

‘லயன் கிங்’ இசைச் சாயலுடன் தொடங்கும் கீரவாணியின் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் சாபு சிரிலின் கலை இயக்கமும் ராஜமவுலியின் கதைக்களத்துக்கு துணை புரிந்துள்ளன.

காலனியத்துக்கு எதிரான சுதந்திர உணர்ச்சியை ஊட்டி பார்வையாளர்களை உணர்வெழுச்சி கொள்ளச் செய்திருக்க வேண்டிய கதைக் களம் கிடைத்தும், அதை நம்பகத்தன்மையோடு சொல்வதில் கோட்டை விட்டுள்ள படம், இரண்டு கதாநாயகர்களுக்கான ‘ஆக்‌ஷன் பிளாக்’குகளின் மிகையால் வழக்கமான மசாலாவாக குறுகிப்போய்விட்டது.