கோவை மாநகராட்சி பகுதிகளில் வேட்புமனு தாக்கல், வாக்கு சேகரிப்பு என, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கி யுள்ளது.

கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய இன்று (பிப். 4)கடைசி நாளாகும். 100 வார்டுகளில்போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய 20 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். 5 மண்டல அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.

நேற்று முன்தினம் வரை பெரியஅளவில் வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் இரவுதான் இறுதி செய்தன. திமுகஉட்பட சில கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் நேற்று காலை அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என பலரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய அணி அணியாக கிளம்பியதால், மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியது.

32-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் மகேஸ்வரன் என்பவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையிலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் குதிரையில் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 69-வது வார்டில்அதிமுக வேட்பாளர் மற்றும் கட்சியினர் இருசக்கர வாகனங்களில் கட்சிக் கொடியுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

81-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் எஸ்.கார்த்திகேயன், மாட்டு வண்டியில் டார்ச் லைட் சின்னத்துடன் வந்து கோவை ஓசூர் சாலையில் உள்ள மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 100 வார்டுகளிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து முடித்து, பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.

அதிமுக வேட்பாளர்கள் நேற்று பெரும்பாலான வார்டுகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக, பாமக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதோடு சுயேச்சைகளும் அதிகளவில் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால், இன்றும் ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த கட்சி வேட்பாளர்களும், தாக்கல் செய்யாத கட்சிகளின் வேட்பாளர்களும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கினர்.