சென்னை: காரைக்காலை சுற்றியுள்ள உள்ள பகுதிகளில் காலரா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சோழிங்நல்லூர் சட்டமன்ற தொகுதியில் எழில் நகர் பகுதியில் ரூ.1.30 கோடியில் சமூக நலக் கூடம் கட்டும் பணியை தொடங்கி வைத்து கண்ணகி நகர் நகர்புற சுகாதார மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “புதுச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் பகுதியில் 39 பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. முதலில் நூற்றுக்கணக்கானோருக்கு பாதிப்பு என்கிற வகையில் செய்திகள் வெளியானது. இன்றைக்கு அரசின் சார்பிலேயே வெளிவந்து இருக்கிற செய்தி 39 பேருக்கு பாதிப்பு இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு காரைக்காலை சுற்றியிருக்கிற மாவட்டங்கள் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கின்ற நம்முடைய ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமுருகல் என்கிற பிளாக்கில் இருக்கிற திட்டச்சேரி, கணபதிபுரம், அதேபோல் நாகூர் ஆகிய இடங்களிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்மனார்கோவில் பிளாக்கில் திருக்கடையூர், சங்கரன்பந்தல் ஆகிய இடங்களில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் நன்னிலம் பிளாக்கில் கொல்லாபுரம், வல்லான்குடி, உதயவேந்தபுரம் ஆகிய இடங்கள் காரைக்காலை ஒட்டியிருக்கிற பகுதிகளாகும்.

 

இந்த இடங்களில் நேற்றைக்கு நம்முடைய பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரை நேரடியாக அங்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அவர் அங்கு உள்ள எல்லா கிராமங்களிலும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து பயன்படுத்துக்கின்ற தண்ணீரிலிருக்கின்ற குளோரின் அளவை கண்டறிதல் மற்றம் அவர்களுக்கு யாருக்காவது இதுபோன்ற பாதிப்பு அதாவது வயிற்றுப்போக்கோ அல்லது வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படும்போது பொதுவெளியில் போகக்கூடாது எனவும் கழிப்பறையில் மட்டுமே போக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல், இந்தச் சுற்றுப்புற கிராமங்களில் இருக்கின்ற மருத்துவமனைகளில் இந்த வயிற்றுப்போக்குக்கும், வாந்திக்கும் தேவையான மருந்து மாத்திரைகள் முழுமையாக இருக்கிறதா என்பதை உறுதி படுத்த சொல்லியிருக்கிறோம். அவர்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சொல்லியிருக்கிறோம்.

காய்ச்சிய தண்ணீரையே பருக வேண்டும் என்றம் உண்ணுகின்ற உணவை நன்கு வேகவைத்த உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறோம். இப்படி வருமுன் காப்போம் என்கிற வகையில் நம்முடைய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது” என்று அமைச்சர் தெரிவித்தார்.