தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும், உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 2.37 கோடி வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோரில், ஒரு கோடி நுகர்வோர்களுக்கு (42.19 சதவீதம்) மின் கட்டண உயர்வு எதுவும் இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் தொடரும் என்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இருமாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதித் சுமையில் சிக்கியுள்ளதால், கட்டணத்தை மாற்றியமைக்க உத்தேசித்து உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதையடுத்து, உத்தேச கட்டணம் குறித்து, மின் நுகர்வோர் தங்களது கருத்தை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் இணையத்தில், தங்களது கருத்துகளை அடுத்த 30 நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், அனைவரின் கருத்துகளுக்கும் உரிய பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.