இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு அமீன் என்ற மகனும், கதீஜா, ரஹீமா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் அமீன் தற்போது இசைப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ரஹ்மானின் மூத்த மகளான கதீஜா, ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ பாடலை எஸ்.பி.பி.யுடன் இணைந்து பாடியிருந்தார். இது தவிர ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஃபரிஷ்தா’ என்ற ஆல்பம் பாடலையும் பாடினார்.

இந்நிலையில் கதீஜா ரஹ்மான் தனக்கு ரியாஸ்தீன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், ”இறைவனில் அருளால் வளர்ந்து வரும் தொழிலதிபரும், ஆடியோ இன்ஜினீயருமான ரியாஸ்தீன் ஷேக் முஹம்மதுவுடன் எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி என்னுடைய பிறந்த நாள் அன்று நெருங்கிய உறவினர்கள் சூழ நடைபெற்றது” என்று கதீஜா தெரிவித்துள்ளார்.