சென்னை: கோயில்களில் வழிபாட்டில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம், “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அனைத்துச் சமூகத்தினரும் சாதிய பாகுபாடின்றி வழிபாடு செய்வதற்கான உரிமையைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி தமிழகத்தில் இந்து சமய அறநிலயத்துறையின் கீழுள்ள 43,283 கோயில்கள் அனைத்திலும் அறங்காவலர் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். தற்போது 780 கோயில்களில் மட்டும்தான் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேடு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள அனைத்துத் திருக்கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை அமைக்கும்போது சட்டப்படி ஆதி திராவிடர் ஒருவரும், பெண் ஒருவரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். அதைத் தமிழக அரசு உறுதி செய்யவேண்டும்.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் வழிபாட்டில் சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முதல்வர் அறிக்கையொன்றைக் கேட்டுப்பெற வேண்டும். அந்த அறிக்கையைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடவேண்டும்.

இந்து சமய அறைநிலையச் சட்டம் 1959, பிரிவு 106 இல் ”எவ்விதப் பாகுபாடுமின்றி பிரசாதம், தீர்த்தம் வழங்கவேண்டும்” என உள்ளது. அதற்கு முரணாக செயல்படும் பூசாரிகள் எவராயிருந்தாலும் அவர்களை பூசாரிப் பொறுப்பிலிருந்து நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் பதிவு செய்து கொண்டுள்ள சுமார் நான்காயிரம் கோயில்களும் பொதுக் கோயில்களாக உள்ளனவா? என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறைக்குக் கீழுள்ள கோயில்கள் அனைத்திலும் அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அறிவிப்புப் பலகையொன்று பொருத்தப்பட வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் தற்போது நடைமுறையில் உள்ள மண்டகப்படி / உபயதாரர் பட்டியலில் பட்டியல் சமூகத்தினருக்கும் இடம் அளிக்கவேண்டும். பல இடங்களில் காவல்துறையினருக்கு உபயம் உள்ளது. அது காவல்துறையின் சமயச் சார்பற்ற நிலைக்கு எதிரானதாக உள்ளது. எனவே காவல்துறை உபயதாரராக இருப்பதிலிருந்து வெளியேற்றுவதற்குரிய ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.