மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 51.16 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 51.16 கோடிக்கும் அதிகமான (51,16,46,830) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும், கூடுதலாக 20,49,220 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 49,19,73,961 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 2.30 கோடி (2,30,03,211)) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 49 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 57,64,712 முகாம்களில் 49,53,27,595 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 57,97,808 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நம் நாட்டில், இதுவரை மொத்தம் 3,10,15,844 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41,096 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விகிதம் 97.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 44,643 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து 40 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,14,159 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.30 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,40,287 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 47,65,33,650 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் 2.41 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.72 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 60 நாட்களாக இந்த எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்குக் குறைவாக ஏற்பட்டுள்ளது.