இனி வருங்காலங்களில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியினால் விபரீதம் ஏதும் ஏற்படாமல் இருப்பது உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு அப்பாவி சிறுவனின் உயிரை பறித்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், பெரம்பலூர் மாவட்ட விவசாயி வீட்டின் மேற்கூரையை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.

30-12-2021 அன்று புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டா இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பதினோறு வயது சிறுவன் புகழேந்தியின் தலையில் பாய்ந்து, ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்தச் சூழ்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்கிற விவசாயி அப்பகுதியில் உள்ள கல்நார் கூரையுடன் கூடிய வீட்டில் வசித்து வருவதாகவும், இந்த வீட்டின் பின்புறம் சிறிது தூரத்தில் உள்ள மலைப் பகுதியில் துப்பாக்கி சுடும் மையம் செயல்படுவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வீட்டின் கூரைப்பகுதியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதாகவும், இந்த நிலையில் கூரைப் பகுதியில் துளை ஏற்பட்டதையும், அதிலிருந்து வெளிச்சம் ஊடுருவியதையும் கண்டதும் தன் மகனை விட்டு மேற்கூரையில் ஏறிப் பார்க்கச் சொன்னதாகவும், ஏணி வைத்து ஏறிப் பார்த்ததில் அங்கு ஒரு துப்பாக்கி குண்டு கிடந்ததாகவும், இது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்நிலையில் அதே வீட்டின் மற்றொரு பகுதியிலிருந்து மேலும் ஒரு தோட்டாவை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அருகில் உள்ள மலைப் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டதும், பயிற்சியின் போது அவர்கள் பயன்படுத்திய குண்டுகள் விவசாயி வீட்டின் மேற்கூரையை துளைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. நல்ல வேளையாக யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்தாலும், இதே காரணத்திற்காக நாம் ஒரு சிறுவனை அண்மையில் இழந்திருக்கின்ற நிலையில், நாரணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடும் பீதியில் உள்ளனர். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் துப்பாக்கிச் சுடும் மையங்களிலும் போதிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும், பாதுகாப்பு ஏற்படுத்த முடியவில்லை என்ற சூழ்நிலை வந்தால் அங்கு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பதும், இனி வருங்காலங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சியினால் விபரீதம் ஏதும் ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டுமென்பதும் பொதுமக்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது. இதைச் செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துப்பாக்கிச் சுடும் மையங்கள் மக்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யவும், ஆய்வின் அடிப்படையில் பயிற்சியை மேற்கொள்ளத் தேவையான அனுமதியினை வழங்கவும், ஆய்வின் முடிவு வேறு மாதிரி இருக்கும்பட்சத்தில் துப்பாக்கிச் சுடும் மையத்தினை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.