போலிச் சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன், போலி பள்ளி மாற்று சான்றிதழ் சமர்ப்பித்ததால், 2003-ம் ஆண்டு பணி நீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை வேலூர் தொழிலாளர் நல நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், போலி சான்றிதழ் அளித்ததாக சொல்லப்படும் சிலர், சிறிய தண்டனைகளுடன் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ள போது, தன்னை மட்டும் பணி நீக்கம் செய்து பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு போக்குவரத்துக் கழகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை இன்று (ஆக. 28) விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மனுதாரர் போலி சான்றிதழ் சமர்ப்பித்தது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளதால், அவருக்கு மீண்டும் பணி நியமணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், அவரை பணி நீக்கம் செய்தது சரி என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதே சமயம், போலி சான்றிதழ் அளித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார்.