கொழும்பு: இந்தியாவை தொடர்ந்து இலங்கையும் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர். ஆனால் இலங்கை ரூபாயில் அதுவும் கடனுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகபடியான கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உரல்ஸ் தரத்திலான கச்சா எண்ணெய் 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள்- ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் மலிவான விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது.

இதனால் மே மாதத்தில் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் 2-வது இடத்துக்கு ரஷ்யா முன்னேறியுள்ளது. இதுவரை இரண்டாமிடத்தில் இருந்த சவூதி அரேபியா தற்போது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடனுக்கு கச்சா எண்ணெய்

இந்தநிலையில் இந்தியாவை தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க இலங்கையும் முயற்சி மேற்கொண்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. வாகனங்கள் பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு கடன் வரம்பு நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து பெட்ரோல், டீசலை இந்தியா வழங்கி வருகிறது. ஆனால் இது போதுமானதாக இல்லை. அதேசமயம் இலங்கை வழக்கமாக கச்சா எண்ணெய் வாங்கும் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைக்கு கடனுக்கு கச்சா எண்ணெய் வழங்க மறுத்து விட்டன.

இந்த ஆண்டு செலுத்த வேண்டிய 7 பில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடனை இலங்கை திருப்பிச் செலுத்த முடியவில்லை. 2026 ஆம் ஆண்டு வரை ஆண்டு தோறும் சராசரியாக 5 பில்லியன் டாலர் செலுத்த வேண்டும். இந்தியாவை தொடர்ந்து இலங்கையும் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவில் முகாமிட்டுள்ளனர்.

ரஷ்யா ஒப்புக்கொள்ளுமா?

இதுகுறித்து இலங்கை அமைச்சர் விஜயசேகர கூறியதாவது:

“ரஷ்ய அரசிடம் இருந்தோ அல்லது ரஷ்ய நிறுவனங்களிடமிருந்தோ நேரடியாக எண்ணெய் வாங்க முடிந்தால் எங்களுக்கு ஒரு நன்மை இருக்கிறது. பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இரண்டு அமைச்சர்கள் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்’’ என்று கூறினார். உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவை போலவே இலங்கையும் நடுநிலையே வகிக்கிறது.

இதனால் குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் அதேசமயம் கடனுக்கு கச்சா எண்ணெய் வாங்க இலங்கை திட்டமிடுகிறது. இதுமட்டுமின்றி இந்தியாவை போலவே தங்கள் நாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய இலங்கை விரும்புகிறது.இலங்கை அமைச்சர்கள் இதன் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதற்கு ரஷ்யா ஒப்புக் கொள்ளுமா எனத் தெரியவில்லை. இந்தியாவிடம் ரூபாயில் பரிவர்த்தனை செய்யும்போது மற்ற பொருட்களை வாங்கும்போது ரூபிளாக கொடுத்த சமன் செய்யும் வாய்ப்பு ரஷ்யாவுக்கு வாய்ப்புண்டு. ஆனால் இலங்கையுடன் அத்தகைய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பில்லை. எனவே இலங்கையின் கோரிக்கையை ரஷ்யா ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.