‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு குறித்து நடிகை சமந்தா பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் நேற்று (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது ‘புஷ்பா’. படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு மற்றும் உடல் மொழி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு குறித்து நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”இது ஒரு அல்லு அர்ஜுன் பாராட்டுப் பதிவு.
ஒவ்வொரு நொடியும் நம்மைக் கவர்ந்திழுக்கும் நடிப்பு. நம் கவனத்தை சிதறச் செய்யாத ஒரு நடிகரின் நடிப்பில் நான் எப்போதும் உத்வேகம் பெறுவேன். ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பு அப்படியானது. அவர் பேசும் மொழி முதல் ஒருபக்க தோள்பட்டையைத் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது வரை அனைத்தும் பாராட்டுக்குரியவை”.
இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.
‘புஷ்பா’ படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.