வட மாநிலங்களில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடும் பனிப்பொழிவும், குளிரும் காணப்படும். அந்த வகையில், தற்போது டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான குளிர் இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ராஜஸ்தான், காஷ்மீர், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் உறைநிலைக்கும் கீழாக வெப்பநிலை பதிவாகி வருகிறது.

ராஜஸ்தானில் பெரும்பாலான மாவட்டங்களில் 5 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை நிலவுகிறது. அதே சமயத்தில், அங்குள்ள சிக்கார் மாவட்டத்தில் மைனஸ் 3.3 டிகிரியாகவும், சூரு மாவட்டத்தில் மைனஸ் 1.1 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதேபோல, ஜம்மு – காஷ்மீர், உத்தராண்ட் மாநிலங்களின் பல்வேறு உறைநிலையான 0 டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை நிலவுவதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், உத்தராகண்டில் டிசம்பர் 18 முதல் 21-ம் தேதி வரை அதிக குளிர் நிலவும் என்பதால் அந்த மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் பிறப்பித்துள்ளது. -பிடிஐ