மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘காசேதான் கடவுளடா’ ரீமேக் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்க ஏவிஎம் தயாரித்த படம் ‘காசேதான் கடவுளடா’. 1972ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவைப் படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

‘காசேதான் கடவுளடா’ படத்தின் தமிழ் ரீமேக் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், சிவாங்கி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஜூலை 16ஆம் தேதி சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்தச் சூழலில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடைபெற்று வந்த படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளது. டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.