நாட்டில் 70 சதவீத சிறுவர்களுக்கு (15 வயது முதல் 18 வயது) முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளில் போடப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3-வது டோஸ் தடுப்பூசி (பூஸ்டர் தடுப்பூசி) செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதிலும் இதுவரை 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், தகுதிவாய்ந்த அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய தடுப்பூசிய இயக்கத்தில் இளம் இந்தியர்கள் பங்கேற்று நாட்டை வலுப்படுத்தியுள்ளனர். 15 முதல் 18 வயது வரை உள்ள 1.47 கோடி பேருக்கு இதுவரை 2 டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.