மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர்.
தமிழகத்தில் வங்கக் கடலில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தடைக்காலம் முடிந்தும், நாகை துறைமுகத்தில் இருந்து புறப்படும் முன்பாக சூடம் ஏற்றி, பூஜை செய்து கடல் மாதாவை வணங்கினர். அக்கரைப்பேட்டை, கீச்சான்குப்பம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கச்சென்றனர்.
தமிழகத்தின் கிழக்குக் ஆழ்கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு விசைப்படகுகள் மீன்பிடி தடை காலம் அமுலில் இருந்தது. தடைகாலம் 14ஆம் தேதி (நேற்று) இரவோடு முடிவடைந்தது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். இரண்டு மாதமாக வெறிச்சோடி காணப்பட்ட சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இன்று மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்றதால் களைகட்டியுள்ளது.
விசைப்படகுகள் புறப்படுவதற்கு முன்னதாக தேவாலயத்தில் உள்ள அருட்பணியாளர்கள் கடல் அன்னைக்கும் படகுகளுக்கும் புனிதநீர் தெளித்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்து அனுப்பி வைத்தனர். இரண்டு மாத காலத்துக்கு பின்னர் மீன்பிடிக்க செல்வதால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என சின்னமுட்டம் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், உயர்தர மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என்றும் அதே வேளையில் அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் தொடர்வதால் கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மீன்களை வாங்கி செல்ல சின்ன முட்டதிற்கு நாளை வருவார்கள் என்றும் சின்ன முட்டம் மீனவர்கள் நம்பிகையுடன் மீன் பிடிக்க சென்றனர்.