சுருக்குமடி வலையை கொண்டு 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு குறைந்தபட்சம் 53 மணிநேர கால அவகாசத்தை நீட்டித்து வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் அமைப்பு சார்பில் புதிதாக இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள்ளான கடற்பரப்பில் சுருக்கு மடி வலையைக் கொண்டு மீன்பிடிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி தடை விதித்து உத்தரவிட்டு, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில், சுருக்குமடி வலையை 12 நாட்டிக்கல் சுற்றளவுக்குள் பயன்படுத்த அனுமதிக்க கோரியும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சுருக்குமடி வலையைக் கொண்டு செல்ல அனுமதிக்க கோரியும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் எடுத்து செல்ல அனுமதியளித்து உத்தரவிட்டது. மேலும், 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம்.இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து விட்டு படகுகள் கரை திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மீனவர்கள் அமைப்பு சார்பில் இன்று (பிப்.2) புதிய இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஒருமுறை மீன்பிடிக்க 12 நாட்டிக்கல் மைல் செல்ல குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஆகும். அதன் பின்னர் மீனை பிடித்து விட்டு குறித்த நேரத்தில் திரும்புவது என்பது நடைமுறைக்கு சாத்தியம் இயலாத காரியம்.

மேலும், காலங்காலமாக 12 முதல் 200 நாட்டிக்கல் மைல் வரை தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். மேலும், மீன்களும் 20 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் தான் கிடைக்கின்றன. எனவே, அவ்வாறு ஒரு முறை 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீன்பிடித்துவிட்டு திரும்ப குறைந்தது 53 மணி முதல் 58 மணி நேரமாகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு சுருக்குமடி வலையைக் கொண்டு 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எந்த பலனும் இல்லாமல் இருக்கிறது. இந்த உத்தரவில் மேலும் பல சிரமங்களும் உள்ளன. எனவே சுருக்குமடி வலையை கொண்டு 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு குறைந்தபட்சம் 53 மணிநேர கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். அதற்கு ஏதுவாக கடந்த ஜனவரி 24-ம் தேதி பிறப்பித்த முந்தைய இடைக்கால உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.