குமாரபாளையத்தில் காவிரி கரையோர குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவையும் எட்டியதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குமாரபாளையம் கரையோரப் பகுதிகளான கலைமகள் தெரு, இந்திரா நகர், பழைய காவிரி பாலம் அருகே உள்ள அண்ணா நகர், மணிமேகலை தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளினுள் நீர் புகுந்தது.

இதையடுத்து அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே திருச்செங்கோடு கோட்டாட்சியர் இளவரசி தலைமையிலான அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கரையோரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது வட்டாட்சியர் தமிழரசி, நகராட்சிப் பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.