அண்ணாநகர்: நாளை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, ஓசூர், சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தினமும் 12 முதல் 15 லாரிகளில் இருந்து பூக்கள் வருகிறது. நாளை தமிழ் வருட பிறப்பு என்பதால் வழக்கத்தைவிட சுமார் 30 லாரிகளில் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் மல்லிகை பூ 150, பன்னீர் ரோஸ் 20, சம்பங்கி 40 ரூபாய், சிகப்பு ரோஸ் 50 ரூபாய், சாக்லேட் ரோஸ் 60 மற்றும் அரளி பூ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நாளை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்படி, மல்லிகை பூ ஒரு கிலோ 150ல் இருந்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாமந்தி 120 ரூபாயில் இருந்து 180 பன்னீர் ரோஸ் 20ல் இருந்து 50, அரளி பூ 80ல் இருந்து 240, கனகாம்பரம் 300 ல் இருந்து 500 முதல் 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் சிவப்பு ரோஸ் 20ல் இருந்து 50க்கும் சாக்லேட் ரோஸ் 60ல் இருந்து 140க்கும் விற்பனையாகி வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் பொருளாளர் பெருமாள் கூறுகையில்,’’ நாளை தமிழ் வருடபிறப்பு முன்னிட்டு மல்லிகை பூ உள்பட அனைத்து பூக்களின் விலைகளும் உயர்ந்துள்ளது. இரண்டு நாளைக்கு பிறகு வழக்கமான விலைக்கு பூக்கள் விலை குறைந்துவிடும்’’ என்றார். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினசரி 150 முதல் 200 வாகனங்களில் 10 டன் பழங்கள் வருகிறது. நாளை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மேலும் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்ற சாத்துக்குடி நேற்று முன்தினம் முதல் 55க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் பைனாப்பிள் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ தர்ப்பூசணி 6ல் இருந்து 10க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ஆப்பிள் 130ல் 150 முதல் 200 வரை விற்பனையானது. வாழை தார் 250ல் இருந்து 500க்கு விற்றது. கமலா ஆரஞ்ச் 50ல் 70க்கும் பச்சை திராட்சை 50ல் இருந்து 80க்கும் அத்திப்பழம் 70ல் இருந்து 90க்கும் பப்பாளி 15 ல் இருந்து 25க்கும் சப்போட்டா 20ல் இருந்து 60க்கும் மாதுளை 150 ல் இருந்து 250க்கும் கொய்யா 30 ல் இருந்து 60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், பழங்கள் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
பழ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் கூறுகையில்,’’ தெலுங்கு வருட பிறப்புக்கு அப்புறம் அனைத்து பழங்களின் விலைகள் உயர்ந்தது. ஆனால் நாளை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பழங்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலைமை இன்னும் 2 மாதம் நீடிக்கும்’’ என்றார்.