டெல்லி, அம்ரிதா ஷெர்கில் மார்க் பகுதியில் பாலிவுட் நடிகை சோனம் கபூரின் வீடு உள்ளது. சோனம் கபூர் தனது திருமணத்துக்குப் பிறகு, கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் இங்கு வசித்து வருகிறார். இந்நிலையில் சோனம் கபூரின் மாமியார் கடந்த மாதம் பணம் மற்றும் நகைகளை சரிபார்த்தபோது, ரூ.2.4 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது.
இது தொடர்பாக துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், வீட்டில் வேலை செய்து வரும் 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இத்திருட்டு தொடர்பாக சோனம் கபூரின் மாமியாரை உடனிருந்து கவனித்து வந்த செவிலியர் அபர்ணா ரூத் வில்சன் (31), அவரது கணவர் நரேஷ் குமார் சாகர் (31) ஆகியோரை கைது செய்துள்ளனர். ஷோகர்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக நரேஷ் குமார் வேலை பார்த்து வருகிறார்.
கைது நடவடிக்கைக்கு முன், சரிதா விஹார் பகுதியில் உள்ள இவர்களின் வீட்டில் போலீஸார் சோதனையிட்டனர். என்றாலும் திருட்டுபோன பணம் மற்றும் நகைகள் இன்னும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. போலீஸார் இவ்வழக்கில் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.