தமிழக அரசின் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தொற்று பரவலை தடுப்பதற்கானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைதமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி வெள்ளி, சனி, ஞாயிறுஆகிய 3 நாட்கள் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதிஇல்லை என அறிவிக்கப்பட்டது.

இதன்பேரில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையான நேற்று வழிபாட்டுத் தலங்கள் தடுப்புகளை கொண்டு மூடப்பட்டன. கோயில்களில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியில்லை எனவும், ஆகம விதிகளின்படி வழக்கம்போல் சுவாமிக்கு வழிபாடுகள் நடைபெறும் எனவும் கோயில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

காஞ்சிபுரத்தில் முக்கிய கோயில்களான வரதராஜ பெருமாள், காமாட்சியம்மன், ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், குமரகோட்டம் கோயில்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசுவாமி, வேதகிரீஸ்வரர், ஸ்தலசயன பெருமாள், ஏரிகாத்த ராமர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் வீரராகவப் பெருமாள், திருத்தணி முருகன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் மற்றும் பெரிய பாளையத்து அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டிருந்ததால், பக்தர்கள் ராஜகோபுரத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர்.

எனினும், கிராமப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்களில் மக்கள் சுவாமியை வழிபட்டனர்.