பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தமிழகத்திலேயே முதன்முறையாக வெல்லம் ஏலம் இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லத்தை திண்டுக்கல் மாவட்டம், நெய்காரப்பட்டி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள வெல்ல மண்டிகளில் தனியார் வியாபாரிகளிடம், விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். ஆனால், அதற்கான உரிய விலை கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசே அச்சு வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும், அதனை, தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அச்சு வெல்லத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலேயே முதன் முறையாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஏலம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தொடக்க நிகழ்வு அங்கு நடைபெற்றது. பாபநாசம் எம்.எல்.ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்து ஏலத்தை தொடங்கி வைத்தார். வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் கோ.வித்யா, ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர்கள் ஆர்.தாட்சியாயினி, டி.முருகானந்தம், விளம்பர மற்றும் பிரச்சார கண்காணிப்பாளர் பி. சித்தார்த்தன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற ஏலத்தில் பாபநாதம், அய்யம்பேட்டை, இலுப்பக்கோரை, கணபதிஅக்ரகாரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலிருந்து 21 விவசாயிகள், 2130 கிலோ வெல்லத்தை கொண்டு வந்தனர்.

இதில் திருச்சி, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியிலிருந்து 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். 30 கிலோ கொண்ட 1 சிப்பத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1200-ம், குறைந்தபட்சமாக ரூ. 900-ம், சராசரியாக ரூ, 1150 என விலை ஏலம் தொகையாக கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏலத்திற்கான தொகை வழங்கப்பட்டது.