சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 1000 பேருந்து நிறுத்தங்கள் மூலம் வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து தட சாலைகளில் 1,416 பேருந்து நிறுத்தங்களை சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்தப் பேருந்து நிறுத்தங்களில் பல பேருந்து நிறுத்தங்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளன. இந்நிலையில், 1000 பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி ஏற்கெனவே பராமரிப்பு காலம் முடிந்த 65 பேருந்து நிறுத்தங்கள், மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ள 779 பேருந்து நிறுத்தங்கள், புதிதாக கண்டறியப்பட்டுள்ள 156 பேருந்து நிறுத்தங்கள் என மொத்தம் 1000 பேருந்து நிறுத்தங்களை மறு சீரமைப்பு செய்து வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தில் சென்னையில் உள்ள 100 பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய விரைவில் ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. ஆலோசகர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்பு அவர்கள் இந்தப் பேருந்து நிறுத்தங்களை ஆய்வு செய்வார்கள்
இந்த ஆய்வின் அடிப்படையில் பேருந்து நிறுத்தங்களை நவீனப்படுத்துவது தொடர்பான திட்டங்களை பரிந்துரை செய்வார்கள். மேலும், பேருந்து நிறுத்தம் மூலம் வருவாய் ஈட்டும் திட்டங்களையும் அவர்களே பரிந்துரை செய்வார்கள். மறு சீரமைப்பு செய்யப்படவுள்ள பேருந்து நிறுத்தங்களில் நவீன நிழற்குடைகள், பேருந்து தகவல் பலகைள், விளக்குகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறலாம். மேலும் வருவாய் ஈட்ட விளம்பரங்கள் செய்வது, வணிக இடங்களை கண்டறிந்து அங்கு கடைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும். விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்தப் பணிகள் எல்லாம் நடைபெறும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.