நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உதவியுடன் கல்வியை மேம்படுத்துவதற்கு உலகில் சிறந்த பல்கலை.களுடன் இணைந்து செயல்பட ஜி20 கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக மத்திய கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி கூறினார்.
ஜி-20 அமைப்பின் 2022-23-ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கல்வித்துறை சார்ந்த ஜி20 முதல் கல்வி பணிக்குழு மாநாடு சென்னையில் கடந்த ஜன. 31-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
3 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் மத்திய உயர்கல்வித் துறை செயலர் கே.சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை செயலர் சஞ்சய் குமார் மற்றும் 30 உறுப்பு, விருந்தினர் நாடுகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 80 பேர் கலந்துகொண்டனர்.
கல்வியில் மின்னணு தொழில்நுட்பங்களின் தாக்கம், பல்வேறு நாடுகள் எதிர்நோக்கியுள்ள கல்வித்துறை சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த மாநாடு முடிந்தபின் செய்தியாளர்களிடம் மத்திய உயர்கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி கூறியதாவது: இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பம் சார்ந்த சிறந்த கல்வி முறைகள் தொடர்பாக அதிக அளவில் விவாதிக்கப்பட்டது. பல்வேறு நாடுகள் சந்திக்கும் கல்வி சவால்களுக்கு நிலையான தீர்வுகளை கண்டறியவும், எதிர்காலத்தில் கற்றல் திறனை மேம்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்படவும் மற்ற நாடுகள் ஆர்வம் காட்டின.
தற்போதைய காலச்சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றலை மேம்படுத்த உலகம் முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 கல்விப் பணிக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. வரும் ஜூனில் நடைபெற உள்ள இறுதி கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை குறைக்கவும், தொழிற்கல்வியை மேம்படுத்தவும் முக்கியத்துவம் வழங்கப்படும். அதன்படி, தேசிய கல்விக் கொள்கையின் மூலம் 50 சதவீத பள்ளிக் குழந்தைகள் வரும்காலத்தில் திறன் பெற்றவர்களாக இருப்பர். மேலும், மாணவர்களின் திறன்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்கு ஒரு செயல் திட்டமும் வகுக்கப்படும்.
இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் மார்ச் 15-ம் தேதி அமிர்தசரஸில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் முன்வைக்கப்படும். ஜி20 மாநாடு சார்ந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் கூட்டங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை குறைக்கவும், தொழிற்கல்வியை மேம்படுத்தவும் முக்கியத்துவம் வழங்கப்படும்.