சாலைகள் அமைக்கும் விவகாரத்தில் கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரிய துரோகத்தை தமிழக அரசு செய்து கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை தொடங்கி வைத்த பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாநகரில் பிரதான சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன. இதை கண்டித்து மாவட்ட பாஜக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சாலைகள் அமைக்கும் விவகாரத்தில் கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரிய துரோகத்தை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.

இந்தப் பகுதியில் இருந்து அதிக வரி வருவாயை அரசு பெற்று வருகிறது. இங்கு, சாலைகள்கூட முறையாக அமைக்கப்படவில்லை. குப்பையைக்கூட மாநகராட்சி சார்பில் எடுப்பதில்லை. தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக்குடிநீர் குழாய்களை சூயஸ் திட்டத்துக்காக அகற்றுவதாக இருந்தால் இதுகுறித்து அரசிடம் நிச்சயமாக பேசுவேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை, என்றார்.