“ஹே ஒன்னத்தான்… ஒன்னத்தான்…” என இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பேசி பதிவிடும் வீடியோக்கள் இன்ஸ்டாவில் அண்மையில் பலராலும் ரசிக்கப்பட்டது. bonnie_stone_23 என்ற பெயரில் வீடியோக்களைப் பதிவிடும் அந்த இளம்பெண், தனது பல வீடியோக்களை “ஹே ஒன்னத்தான்… ஒன்னத்தான்…” என்று பேசிதான் தொடங்குகிறார். குறிப்பாக, காதலனோடு கொஞ்சிப்பேசி சண்டையிடுவது போன்ற தொனியில் அவர் பேசி பதிவிடும் இன்ஸ்டா ரீல்ஸ்கள் வியூஸ்களை அள்ளுவதுடன், அந்த வீடியோக்களின் பின்னணியில் ஒலிக்கும் பிரபலமான தமிழ் திரைப்பட காதல் பாடல்களின் இசை அவரது வீடியோக்களைப் பார்க்கும் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
அதிலும், ‘ஒன்னத்தான் ஒன்னத்தான்’ என்று அழுத்தம் திருத்தமாக இழுத்துப்பேசி கொஞ்சித் தொடங்கும் அவரது இன்ஸ்டா ரீல்ஸ்களைப் பார்க்கும் பலருக்கு, அவரது நிகழ்கால, கடந்த கால நினைவுகளைத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கிறது. வழக்கமாக, ரீல்ஸ்களில் ஏதாவது ஒரு படத்தின் பாடலுக்கு அந்தப் பாடலில் வருவது போன்று நடனமாடி பதிவிடுவது, அல்லது பிரபலமான திரைப்பட வசனங்கள் அல்லது நகைச்சுவைக் காட்சி வசனங்களைப் பேசி நடிப்பது போலவும் பதிவிடப்படும் ரீல்ஸ்களே அதிகம். ஒருசிலர் தங்களது சொந்த கிரியேட்டிவிட்டியில் புதுமையான விஷயங்களையும் முயற்சித்துப் பார்த்து பதிவு செய்தும் வருகின்றனர்.
அதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு பார்வையாளர்களிடம் இருந்து உடனடியாக அங்கீகாரம் கிடைப்பதும் உண்டும். சிலநேரங்களில் கவனிக்கப்படாமல் போய்விடுவதும் உண்டு. ஆனால், சமூக வலைதளப் பக்கங்கள் சமூகத்தின் அனைத்து நிலையினராலும் அன்றாடம் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அதனால்தான், நல்லது செய்யும்போது பாராட்டுகளும், கெட்டது செய்யும்போது எதிர்ப்பும் மலைபோல் குவிந்துவிடுகிறது.
அந்தவகையில், அண்மையில் டிரெண்டான “ஹே ஒன்னத்தான்… ஒன்னத்தான்…” வார்த்தைகளைக் கொண்டு தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை, பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக ட்விட்டரில் பதிவிட்டுள்ள போஸ்டுகள் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. காவல் உதவி செயலி மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை ட்விட்டரில் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு போஸ்டில், “ஹே ஒன்னத்தான்… ஒன்னத்தான்… எவ்ளோ ஆப்ஸ் போன்ல் இன்ஸ்டால் பண்ணியிருக்க, காவல் உதவி ஆப் இன்ஸ்டால் பண்ணி வச்சிக்கோ கண்டிப்பா யூஸ் ஆகும்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. இதேபோல் மற்றொரு போஸ்டில், “ஹே ஒன்னத்தான்… ஒன்னத்தான்… சைபர் ஸ்டாக்கிங் பிரச்சினைகளை ஃபேஸ் பண்றியா, 1930-க்கு கால் பண்ணி ரிப்போர்ட் பண்ணு” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. அதேபோல், இந்த இந்த போஸ்டரின் கீழ் No to Drugs Yes to Life என்ற விழிப்புண்ரவு வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
தஞ்சாவூர் மாவட்ட காவல் துறை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்ட காவல்துறையினரும் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி பெருவாரியான மக்களால் ரசிக்கப்படும், பலரும் மீண்டும் மீண்டும் அதேபோல் ரீகிரியேட் செய்து வெளியாகும் இன்ஸ்டா ரீல்ஸ்களின் மூலம் டிரெண்டாகும் வார்த்தைகளை அல்லது சொற்களை வைத்து இதுபோன்ற விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், தற்போது பலராலும் அடிக்கடி பார்த்து ரசிக்கப்பட்ட “ஹே ஒன்னத்தான்… ஒன்னத்தான்…” வாக்கியம் காவல் துறை விழிப்புணர்வு போஸ்டருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.