ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து, மதுரையில் வகுப்பு வாரிய கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை என்று கர்நாடக உயர் நீதிமன்ற அளித்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் சில இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திலும் இரண்டு நாட்களாக ஒரு சில இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரையில் வகுப்பு வாரிய கல்லூரியில் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுகிறது என்று கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் சர்ச்சை: கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்’ என செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.