இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், மாணவர்கள் உருவாக்கும் 75 செயற்கை கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால பயணத்தில் பலமுன்னேற்றங்களையும், பல்வேறுசவால்களையும் நாம் கடந்துஉள்ளோம். இந்த முன்னேற்றத்தில் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் பங்களிப்பை மறுக்கமுடியாது. உலகளவில் விண்வெளியை மனித சமுதாயத்துக்கு எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதில் இந்தியா முன்னணி நாடாக இருக்கிறது. இதனை சர்வதேச நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்திய சுதந்திரத்தின் 75-வதுஆண்டை மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அவ்வகையில் இந்திய விண்வெளி துறையின் சிறப்பான முன்னெடுப்பாக, இந்தியன் இன்ஜினீயரிங் காங்கிரஸ் சார்பில்நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் 75 செயற்கை கோள்களை உருவாக்க உள்ளனர்.
இந்தச் செயற்கைக் கோள்கள் இஸ்ரோவின் உதவியுடன் அதிகபட்சம் 500 கி.மீ.க்கு உட்பட்டு குறைந்த பூமி சுற்றுப்பாதையில் ஏவப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவில் 150-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 7 கல்வி நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள்ளன.
செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது தொடர்பாகவும் பள்ளி, கல்லூரி மாணவர்களைப் பங்கேற்க அனுமதிப்பது தொடர்பாகவும் தமிழக அரசிடம் பேசி வருகிறோம். 75 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதத்துக்குள் செயல்படுத்தப்பட உள்ளது.
‘ஸ்மார்ட் போன்’ என்பதுபோல இன்றைக்கு ‘ஸ்மார்ட் சாட்டிலைட்’ எனும் கருத்து உருவாகி வருகிறது. அதை நோக்கி நமதுஅடுத்த தலைமுறை மாணவர்களை தூண்டும் வகையிலும், அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் எண்ணத்திலும் பள்ளி, கல்லூரிகளை இதில் இணைத்துக் கொண்டுள்ளோம்.
இந்திய அளவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், அதேபோல் ராஜஸ்தான் முதல் அசாம்,வங்காளம் வரையிலும் அனைத்துமாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் உருவாக்கும் பத்துக்குப் பத்து செ.மீ. கன அடியில், 1,500 கிராம் எடையில் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்கள் மூலம், செல்போனுக்குத் தேவையான இணையதள வசதியை நேரடியாக வழங்க முடியும்.
அதேபோல் செயற்கைக்கோளில் இருந்து தேவையான தரவுகளை தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்துதான் பெற வேண்டும் என்பதில்லை. அதற்காக தனியாக செல்போன் செயலி ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. இன்றைய மாணவர்களாலும் விண்வெளி தொழில்நுட்பத் துறையில் சாதிக்க முடியும் என்பதுடன் மாணவர்களின் வெற்றியும் வளர்ச்சியும் மட்டுமின்றி, நம் நாட்டின் வெற்றியையும் வளர்ச்சியையும் குறிக்கும் செயல்பாடாகவும் இது நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.