டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்.2ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா-கலைஞர் அறிவாலய கட்டிடத்தின் திறப்பு விழா வரும் 2ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டிடம் பல்வேறு நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டிடத்தின் தரை தளத்தில் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசுவதற்கான இடமும், திமுக தலைவருக்கான பிரத்யேக ரூம்களும் அமைக்கப்பட்டுள்ளது. 2வது தளத்தில் கான்பரன்சிங் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சென்னை அறிவாலயத்தில் உள்ளது போலவே நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 3வது தளத்தில் எம்பிக்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வரும் முக்கிய நிர்வாகிகள் தங்குவதற்கான அறைகள் அமைந்துள்ளன. இந்த 3 தளங்களுமே நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். நள்ளிரவு 12 மணி அளவில் டெல்லியை சென்றடையும் அவர், நாளை பிற்பகல் 2 மணி அளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்த உள்ளார்.
இதுதவிர, வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரண தொகையை வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நாளை மாலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், முதல்வர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுப்பார். தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க உள்ளார். அன்றைய தினம் இரவு டெல்லியில் தங்கும் முதல்வர், 1ம் தேதி டெல்லியில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உட்பட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது, திமுக அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுவிக்க உள்ளார்.
அப்போது பாஜகவுக்கு எதிராக வலுவான அணியை அமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2ம் தேதி மாலை 5 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தை, கட்சிக் கொடி ஏற்றி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஒன்றிய அமைச்சர்கள், எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவை முடித்துக் கொண்டு, ஏப்ரல் 2ம் தேதி இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.