திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. 10 பேர் மரணமடைந்தனர். இந்தியாவில் 3 மாத இடைவெளிக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்பட மாநிலங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. இந்தியாவில் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கேரளாவில் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.

நேற்று 22,770 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 4,098 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. தொற்று சதவீதம் 18 ஆகும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் தான் நேற்று மிக அதிகமாக 1034 பேருக்கு நோய் பரவியது. தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 10 பேர் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை கேரளாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 69,945ஆக உயர்ந்தது. கேரள சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.